கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண முகாம்களில் ஆய்வு !
கேரளாவில் செங்கனூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதில் மூன்றாயிரத்து இருநூற்று எழுபத்தி நான்கு பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் செங்கனூர் பகுதியில் நிவாரண முகாம்களை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை ஆய்வு செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துக் கேட்டறிந்தார்.
தற்போது மழை குறைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
வீடுகள் முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இவற்றை அகற்றுவது பலருக்கும் சவாலானதாக உள்ளது.
இன்னும் பல இடங்களில் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் புகுந்துள்ளன. அதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வீடுகளில் புகுந்த பாம்புகளை, பாம்புபிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அகற்றப்படுகின்றன. இன்னும் சிலர் பாம்புபிடி வல்லுநர்களை தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டுவருகின்றனர். வீடுகளிலிருந்து பாம்புகளை அகற்றுவதில் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள்.