கேரளாவை வெள்ளப்பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க 2,600 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் -பினராயி விஜயன் கோரிக்கை!
கடந்த 10 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கேரளா மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் தங்கள் இருப்பிடங்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று தணிந்த நிலையில் மீட்பு பணிகள் நிலைபெற்று வருகின்றது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர், மீனவர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தொடர்ந்து கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மாநிலத்தின் சேதம், மறுக்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்க கேரளாவில் நேற்று அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் “கேரளாவில் 13 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண நிதிகள் வந்துகொண்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரக நாடு ரூ.700 கோடியை அளிப்பதாக கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் வெள்ளச் சேதங்களை பிரதமர் மோடி, இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதன்பின் முதல் கட்ட இடைக்கால நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளனர். ஆனால், இந்த நிதி மீட்புப்பணிக்கு போதாது. மாநிலத்தின் கட்டமைப்புகளுக்கு சிறப்பு நிதி தொகுப்பாக ரூ.2,600 கோடி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு விரைவில் ஒதுக்க வேண்டும்.
கேரள மாநிலம் முழுவதும் மூன்றாயிரத்து இருநூறு நிவாரண முகாம்களில் சுமார் 10.78 லட்சம் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக மழையின் அளவு குறைந்த நிலையிலும் ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. கேரள மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடனை ஒரு ஆண்டுக்குப் பிறகு செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. வீடுகளில் தேங்கியிருக்கும் சேறு மற்றும் கழிவுகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. பல இடங்களில் விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை சேதம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்க வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்தார்