கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவை- மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ்
கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. பலரும் தனது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தனது உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் 247 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ உதவிகளும் செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றன.
மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி கேரளாவை பார்வையிட்ட பின் இந்த மோசமான நிலைமையிலிருந்து கேரளாவை மீட்டெடுக்க என்ன வசதிகள் தேவையோ அதனை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
உடனடி நிதியாக 500 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 100 கோடி ரூபாயும், கிரண் ரிஜ்ஜு 80 கோடி ரூபாயும் அறிவித்துள்ளனர்.
எனவே இப்பொழுது நிதிப்பிரச்சனை இல்லை. அதுமட்டுமில்லாமல் தேவையான உணவும், உடையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
எனவே அந்த பிரச்சனைகளும் இப்பொழுது இல்லை. தொற்று நோய் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3700 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிளம்பிங் மற்றும் மர வேலைகள் செய்ய தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் தான் தேவை. அவர்களால் தான் கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும்.