கேரளாவில் வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்- பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரம்:
கேரளாவில் வெள்ளப்பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மாநிலத்தின் 14 மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தினால் 324 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் 150 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் 2000 க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, 3,14,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் வெள்ளச் சேதத்தை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி கேரளா சென்றுள்ளார்.
இன்று காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கொச்சி கடற்படை தளத்திற்கு சென்றடைந்தார்.
முதலமைச்சர் பினராயி விஜயனுடன் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட திட்டமிட்டிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கொச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.