கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை; பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு!

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததன் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பாதிப்பினால் ஏராளமான உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உண்பதற்கு உணவின்றி தவிக்கிறார்கள். தண்ணீர், பால், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதி இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு மற்றும் தாண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. கொச்சி விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் வரலாறு காணாத வகையில் பெய்துவரும் பேய்மழையால் இதுவரை 324 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு நாட்களில் மட்டும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில் பக்கத்தில் “கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததால் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 80 அணைகள் நிரம்பியதால் திறந்துவிடப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான ஆபத்துகளில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு 2,23,139 பேர், 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். உங்களுடைய உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவியாக இருக்கும், எனவே தாராளமாக உதவி செய்யுங்கள். முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி உதவலாம்” என்று தெரிவித்துள்ளார். இதனுடன் வாங்கி கணக்கு என்னும் பதிவிடப்பட்டுள்ளது.