கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் 3 நாள் விசாரணைக்கு பிறகு முன்னாள் பேராயர் பிராங்கோ கைது
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என கன்னியாஸ்திரி ஒருவர் புகார் தெரிவித்தார்.
பிராங்கோ மூலக்கல் கேரளாவுக்கு வந்த போது 2014 முதல் 2016 வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார். பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மூலக்கல் திருப்புனித்துராவில் (Tripunithura) உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேற்று முன் தினம் அவர் ஆஜரானார். அவரிடம் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் அளித்த தகவல்களின் பேரில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் முன்னாள் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.