கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு; பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமின்…
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள பிஷப் பிராங்கோவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரில், கைதான முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை 2 ஆண்டுகளில் 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28-ம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மீது அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், பிஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் சமர்ப்பித்தனர். ஆதாரங்கள் சரியாக இருந்ததால் கடந்த செப்.21 ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே ஒருமுறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இந்த ஜாமின் மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் பிஷப்பின் பாஸ்போடை ஒப்படைக்க வேண்டும், கேரளாவிற்குள் வரக் கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது.