கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பினால் வாடும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ள முதலமைச்சர், நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி 10 ஆயிரம் போர்வைகள், 15,000 லிட்டர் உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால், 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது:
மழை வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் 25 லட்சம் எண்ணிக்கையிலான டாக்சிசைக்கிளின் போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்), 5 லட்சம் குளோர்பெனரமின் மாத்திரைகள், 1 லட்சம் களிம்புகள், பிற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 இலட்சம் எண்ணிக்கையிலான கை உறைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மொத்தம் ரூபாய் 1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.