ஒட்டுமொத்தமாக பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு வழங்கியது. இதன்மூலம், காற்று மாசு அளவு 30 விழுக்காடு அளவுக்கு குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டாசு விற்பனைக்கு நாடு முழுவதும் ஒட்டுமொத்த தடை விதிக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசும் பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், பட்டாசு உற்பத்தி மற்றும் தயாரிப்புக்கு எந்த தடையும் இல்லை. ஆன்லைனில் பட்டாசு விற்கவும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் பட்டாசுகள் விற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11.45 முதல் 12.45 வரை பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.