ஒடிசாவில் புதிய விமான நிலையம் – நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!
ஒடிசாவில் ஜார்சுகுடா (Jharsuguda) என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஜார்சுகுடா பகுதியில் ரூ.210 கோடி மதிப்பிலான புதிய விமான நிலையத்தை இன்று திறந்து வைத்துள்ளார். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு ஒடிசா அரசு ரூ.75 கோடி வழங்கியுள்ளது.
1,027.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் 2,390 மீட்டர் அளவுள்ள நீண்ட ஓடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய முனையம் 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இதனை இந்திய விமான கழகம் – ஒடிசா அரசுடன் இணைந்து கட்டியுள்ளது.
விமான நிலையத்தை திறந்து வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், ஒடிசாவில் பல வருடங்களாக ஒரே ஒரு பெரிய விமான நிலையம் மட்டுமே உள்ளது. ஒடிசாவின் இந்த 2-வது விமான நிலையம் ஒரு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலமாக ஒடிசாவை உருவாக்கும். தாது வளம் நிறைந்த பகுதியில் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் மோடி கூறினார்.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து நமது இந்திய நாட்டில் 450 விமானங்கள் இயங்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்தில் 950 புதிய விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் பெருமிதமாக கூறினார்.