உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தல்!
மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் மாஸ்கோவில் நடக்கும் பைனலில் பிரான்ஸ், குரோஷியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
போட்டியின் 18வது நிமிடத்தில் பிரீகிக் வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட குரோஷியா வீரர் மான்ஸ்சுகிக் தலையில் பட்டு ‘சேம் சைடு’ கோலாகி போனது.
தொடர்ந்து 28வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் அதிரடி கோல் அடிக்க போட்டி சமமானது.
38வது நிமிடத்தில் கோல் ஏரியாவுக்குள் வைத்து குரோஷிய வீரர் கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கோல் கீப்பரை ஏமாற்றி லாவகமாக வலைக்குள் பந்தை தள்ளிய கிரீஸ்மான், தனது அணிக்கு வெற்றிக்கு வித்திட்டார்.
முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2 – 1 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் வீரர்கள் அசத்தினர். 59வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பவுல் போக்பா கோல் அடித்தார்.
65வது நிமிடத்தில் மபபே கோல் அடிக்க 4 – 1 என வலுவான நிலையில் முன்னிலை பெற்றது.
69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால், குரோஷியாவின் மான்ட்சுகிச் கோல் அடித்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்றினார்.
இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. முடிவில் 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.