உயிரை காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்-மீனவர்கள் அறிவிப்பு !!
கேரளாவில் வரலாறு காணாத பெய்த தொடர் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஏற்பட்ட பேரழிவிலிருந்து மக்களை மீட்க்க 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகுகள் பயன்படுத்தப் படுகின்றன.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களும் தாங்களாகவே 5 பேர் கொண்ட குழுக்களாக அமைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவ குழுக்கள் மிகத்தீவிரமாவும், அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட இடத்திற்கு ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் வருவதற்கு முன்னதாகவே மீனவர்கள் வந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
மீனவர்களின் இந்த பணிக்கு கேரள அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மீனவர்கள் குழுக்களாக பிரிந்து செயல்படுவதற்கு தேவையான நிதி மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகிறது.
கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு பணத்தொகை வழங்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு மீனவரின் பணியும் மகத்தானது. மீனவர்கள் நமது சொத்து என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
நமது மாநிலத்தின் ராணுவத்தினராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.
மேலும் அவர்களின் படகுகள் சேதமடைந்து இருந்தால் அதனை அரசே சரிசெய்து தரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தங்களுக்கு உதவித்தொகை வேண்டாம் என மீனவர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”முதல்வர் எங்கள் பணிகளைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் சகோதர – சகோதரிகளுக்குத்தான் உதவி செய்தோம். மக்களின் உயிரைக்காக்கும் பணிக்கு பணம் வேண்டாம், என தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் இந்த செயல் கேரள முதல்வர் தொடங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.