அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் சாமானிய மக்களின் சிரமங்களை குறைக்கவே இந்த முடிவு- சந்திரபாபு நாயுடு
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல் – டீசல் விலையில் லிட்டருக்கு 4 சதவீதம் வாட் வரியை குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் – டீசல் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, ஆந்திராவில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த விலைக் குறைப்பால் அரசுக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் சிரமங்களைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.
ராஜஸ்தானைத் தொடர்ந்து தற்போது ஆந்திர அரசும் மக்கள் நலன் கருதி, பெட்ரோல் – டீசல் விலையைக் குறைத்துள்ளதை அடுத்து தமிழக அரசும் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.