காஷ்மீர் மாநிலத்தில், கல் எறிந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்பட பொதுமக்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்ததாகவும், ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில், 16 வயது சிறுமி உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஷகிர் அகமது காண்டே (22), இர்ஷாத் மஜீத் (20), இளம் பெண் ஆந்தீப் (16) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் குல்காமில் உள்ள ஹவூரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.