சிறையிலேயே கைதியை அடித்துக் கொல்லும் அளவில் தான் தமிழக சட்டம் ஒழுங்கு: ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி: சிறையிலேயே கைதி ஒருவரை அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சிப் பிரமுகர்களது இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றிருந்தார்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் துரைமுருகன் பற்றிய அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம், திமுகவின் சட்டப்பேரவை செயல்பாடு மீதான மத்திய அமைச்சர் பொன்னாரின் விமர்சனம் மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு ஆகியவை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஜெயக்குமாரின் தேவையற்ற ஊகங்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
மத்திய அமைச்சர் பொன்னார் இன்று இப்படி சொல்லி இருக்கிறார். நாளை என்ன சொல்வார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மாநிலத்தின் தலைநகரில் உள்ள சிறையிலேயே கைதி ஒருவரை பிற கைதிகள் அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.