இந்தியாவிற்கே துரோகம் செய்துவிட்டார் பிரணாப்முகர்ஜி ; ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!!!
சென்னை : இனி அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கரூரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது. தமிழகத்திற்கு விரைவில் ஒரு மாற்றம் தேவை. ஆனால், ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எந்த வித வளர்ச்சிப் பணியும் செயல்படுத்தப்படவில்லை. ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் சுருட்டுவதில் மட்டுமே வல்லவர்களாக இருக்கிறார்கள். இவர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகவும் பின் தங்கி இருக்கிறது. தமிழகத்திற்கு தற்போது நல்ல ஒரு குளுகோஸ் தேவை .
மேலும், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். ஆனால், இதுவரை எந்த உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் மீதும் புகார் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியா காந்தி உடனே அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதே போன்று மோடியும் தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் சென்றது சரியல்ல. தனது இறுதி காலத்தில் அவர் இப்படி திசை மாறிச்சென்றது வெட்கக்கேடானது. இதன் மூலம் அவர் காங்கிரசுக்கு துரோகம் செய்தார் என்பதை விட இந்திய மக்களுக்கு இந்தியாவின், மதச்சார்பற்ற கொள்கைக்கும் துரோகம் செய்துவிட்டார். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் உள்ள நீதிபதியே ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பானது என கூறியுள்ளார். அதனை புதிதாக முளைத்துள்ள அரசியல் தலைவர் என சொல்லிக் கொள்பவர் அதில் பயங்கரவாதிகளும், சமூக விரோதிகளும் இருந்தனர் என்று கூறியுள்ளார். தற்போது அவர் நடித்த படம் வெளியாகிவிட்டது. அதனால் இனி அவர் அரசியல் பேசமாட்டார். அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் அரசியல் பக்கம் வருவார் என்று ரஜினியை விமர்சனம் செய்தார்.