சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இதேபோல் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது.
மற்றொரு பெரிய அணையான கிருஷ்ண ராஜசாகர் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்த 2 அணைகளுக்கும் தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதனால் இன்று காலை 45 ஆயிரத்து 150 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக – கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.
நேற்று 71.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 75.36 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 76 அடியை எட்டியது. கடந்த 17-ந் தேதி அணையின் நீர்மட்டம் 40 அடியாக இருந்தது. தொடர் நீர்வரத்தால் 26 நாட்களில் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 39 ஆயிரத்து 737 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி வருவதால் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் ஆயிரத்து 155 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கால்வாய் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 611 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும்.
அப்படி திறக்கப்பட்டால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் 5 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து இன்று அல்லது நாளை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. ஒரு வாரத்திற்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.