கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி !!!
பெங்களூரு: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். நாளை குமாரசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
கர்நாடகத்தில் பெரும் இழுபறியில் இருந்த முதல்வர் யார் என்ற கேள்வி இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பான்மைமை நிரூபிக்காமலேயே எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
விவசாயிகள் பெயரில் குமாரசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகத்தின் முதல்வராக 2-ஆவது முறை பதவியேற்றுகொண்டார்.
நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அதில் வெற்றி பெற்றவுடன் மற்ற அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள்.
குமாரசாமி பதவியேற்பு விழா இன்று 4.30 மணிக்கு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா, ராகுல், மாயாவதி, பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரபாபு நாயுடு, சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ஓர் அணியில் திரளும் என்ற யூகம் நிலவுகிறது. இந்த விழாவுக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .