கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று:ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
பெங்களூரு :
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்பார்ப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசின் பதவிக் காலம் வரும் 28ம் தேதியுடன் முடிகிறது. அதன் காரணமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 224 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில், 221 பேரும், பா.ஜ.க சார்பில், 222 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்த இரு தேசிய கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் 200 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அத்துடன் சுயேச்சைகளும் ஆங்காங்கே போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம் 2636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தி , முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் சித்தராமையா உள்பட முன்னாள் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ.க சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி, முதல்வர், யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் போன்ற பெரும் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக கர்நாடகாவில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
மக்களின் வாக்கு யாருக்கு, எந்த கட்சிக்கு என்பது வரும் 15ந்தேதி தெரிய வரும்.
தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணி உடன் முடிவடைந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு இயந்திரங்களை, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை தேர்தல் ஆணையம் நேற்று அனுப்பி வைத்தது. மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்து 995 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகிறது. இந்த தேர்தலில்,5 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை, 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அதைத்தொடர்ந்து மே 15 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .