கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு ; உச்சநீதிமன்றம் அதிரடி!!!
புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும்.
காலதாமதமின்றி, ஓட்டெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது.
எம்எல்ஏக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை அழைக்க வேண்டும் என முடிவு செய்ய கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை.
இந்த விவகாரத்தில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்ற வேண்டும். தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றார்.
பா.ஜ.க சார்பில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு வார அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.இதனை அடுத்து கர்நாடகாவில் என்ன நடக்கும் என நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டுள்ளது.