அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு: 49 ஆயிரம் பேர் புறக்கணிப்பு!!
பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 49 ஆயிரம் பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரியவந்துள்ளது .
இதன் காரணமாக, இந்த முறை பி.இ. கலந்தாய்வில் ஒரு லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது .
அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது.
இதில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பப் பதிவு செய்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 14 -ஆம் தேதி வரை நடைபெற்றது.
சென்னை மையத்தில் மட்டும் மூன்று நாள்கள் கூடுதலாக ஜூன் 17 ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இந்த அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே, ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், விண்ணப்பப் பதிவு செய்தவர்களில் 49,781 பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது :
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் , விண்ணப்பப் பதிவு செய்த 1,59,631 பேரில் 1,09,850 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.
49,781 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. பங்கேற்காதவர்கள், மருத்துவம் அல்லது கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு தேதி வருகிற 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.