நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்திற்க்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து சமீப காலங்களில் பேசப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கூட இதனை வலியுறுத்தி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற அர்த்தத்தில் பேசி வருகிறார். இதன்மூலம் நேரம் மற்றும் பணம் மிச்சமாகும் என்ற கருத்தும் பலராலும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய சட்ட ஆணையமானது பல்வேறு அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ள இரண்டு நாள் ஆலோசனை கூட்டமானது சனிக்கிழமையன்று தில்லியில் துவங்க உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அதன் ஆட்சிக் காலம் பூர்த்தியாகும் முன்பே கலைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இயலும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் இரு நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.