18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
அதே சமயம், 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் .
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவதாகவும், 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கில் இன்னும் இழுபறி நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஜூனியர் வழக்குரைஞர்களும், சட்டம் பயிலும், மாணவ மாணவிகளும் நீதிமன்ற அறைக்கு வந்திருந்ததால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வு தீர்ப்பை வழங்கும் நீதிமன்ற அறை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.