திருப்பத்தூர்-சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு.
கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப வட்டம் அருகாமையில் அமைந்துள்ளது அந்த கிணறு. பள்ளி மாணவர்கள்உட்படபலரும்நடந்தும்,சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்லும் அந்த சாலையின் மிக அருகில், தடுப்புச் சுவர் கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது அந்த கிணறு.இது குறித்து அப்பகுதியில் செல்பவர்களிடம் விசாரித்த போது, இந்த கிணறு சில மாதங்களுக்கு முன்பாக தோண்டப்பட்டது தெரிய வந்தது. கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.பாதசாரிகளும், பள்ளி மாணவர்களும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள அந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த கிணறு எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் திறந்த வெளியில் காணப்படுவது ஆபத்தானது. அருகில் வீடுகள் கூட இல்லாத நிலையில், ஏதாவது நிகழ்ந்தால், உதவிக்கு கூட உடனே யாரையும் அழைக்க முடியாத நிலையே காணப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் இவ்விடத்தில் தண்ணீர் தேங்கும் அபாயமும் உள்ளது. மழைக்காலத்தில் மேலும் தெளிவில்லாத நிலை ஏற்படும். அப்போது வாகன ஓட்டிகள் கூட தவறி விழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை குறித்து அந்த ரெட்டியூர் பஞ்சாயத்துத் தலைவர் மூர்த்தியிடம் பேசினோம், `கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் அது தோண்டப்பட்டது. விவசாய தேவைகளுக்காக தனிநபரால் தனியார் இடத்தில் தோண்டப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது தான். இது தொடர்பான அந்நபரிடம் பேசி தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று கூறினார்.“விபத்து ஏதும் நடக்கும் முன்னர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.