ஹாயாக கிரிக்கெட் பார்க்க கிளம்பினார் மல்லையா!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்தில் விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து, அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார்.
இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.
இதனிடையே இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது.
போட்டியை காண ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த மல்லையா ஏ.என்.ஐ. செய்தியாளரின் கண்களில் பிடிபட்டார்.
இந்நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறுகையில் ஏ.என்.ஐ. செய்தியாளர் விஜய் மல்லையாவிடன் இந்தியா திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு மல்லையா, நான் இந்தியா செல்வதை நீதிபதிதான் முடிவு செய்வார். கிரிக்கெட் விளையாட்டின் போது நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிப்பதில்லை என கூறியவாறு சொகுசு காரில் ஏறிச்சென்றார்.