வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி கடற்படையினரால் மீட்பு!
கேரள குடியிருப்பு பகுதிகள் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.
கேரளாவை புரட்டிபோட்டுள்ள இந்த கனமழை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா, வாலையார் போன்ற அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் குடியிருப்பு பகுதிகளில், வீடுகளின் மாடிப்பகுதி வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே பலரும் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை மீட்பதில் மீட்பு படையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஆலுவா பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு கர்ப்பிணி பெண் பனிக்குடம் உடைந்த நிலையில் தவித்து வந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டு அப்பகுதியில் உள்ள சஞ்சீவினி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு அறுவைசிகிச்சையின் மூலமாக அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அதன் பிறகு தன்னையும் தன் குழந்தையும் பத்திரமாக மீட்டெடுத்ததற்கு மகிழ்ச்சி பொங்க தன் நன்றியை தெரிவித்தார்.தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.