முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து, தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய நேரப்படி, மாலை 5.05க்கு பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவிற்காக மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கின்றது. அத்துடன் நாளை மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு சார்பு அலுவலங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறையாகும்.
புதுச்சேரியிலும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.