லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும்.
மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கழகம் முன்பே அறிவித்திருந்தது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்தது.
மேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமான பொருட்கள், தீப்பெட்டி, ஜவ்வரிசி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன.
இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் கனரக வாகனங்களும், 2 லட்சம் மினி வேன்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.