ரயில் படியில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரிகை விடுத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ரயில்நிலையப்பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மாற்றுப்பாதையாக விரைவு ரயில் பாதையில் நேற்று மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் கூட்டநெரிசல் மிக அதிகமாக இருந்தது.
காலை 8.25 மணிக்கு கடற்கரை-திருமால்பூர் இடையிலான ரயில், வழக்கமான தடத்தில் இல்லாமல், விரைவு ரயில் தடத்தில் இயக்கப்பட்டது.
பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு ரயில் வந்தபோது, பக்கவாட்டு சுவர் இடித்து 10 பயணிகள் கீழே விழுந்தனர்.
இச்சம்பவத்தில் சிவக்குமார், நவீன், பரத் ஆகிய மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராயப்பேட்டை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மற்ற 5 பேரில் மூர்த்தி, விஜய், யாசர் ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், மற்ற இருவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.