பொள்ளாச்சியில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி!

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டினால் எலிகாய்ச்சல் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழக, கேரள எல்லையான நீலகிரி, கோவையிலும் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் எலி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 29. இவர் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எலிக்காய்ச்சலால் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவர், கடந்த 5-ஆம் தேதி கோவை அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் போதிய மருத்துகளும், மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என கோவை அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.