பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னையில் 84 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை. டீசல் விலை முதல்முறையாக 77 ரூபாயைக் கடந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரியாகவும் வசூலிக்கிறது.
இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி வசூலித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கவே முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும்.
இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள் என்று பட்டியலிடப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.