உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு !

தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா அருகே, விடுமுறைக்கு பின்னர் பணிக்கு திரும்பிய வீரர்கள், இரண்டாயிரத்து 500 பேர், 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜெய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் 350 கிலோ வெடிமருந்துகள் அடங்கிய ஸ்கார்பியோ வாகனத்தை, வீரர்கள் வந்த பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 46 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் ஸ்ரீநகர் ராணுவ முகாமில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்துள்ளதால், நாடே கண்ணீர் கடலில் மிதந்துக் கொண்டிருக்கிறது. எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கண்டனக் குரல்களும் உரக்க ஒலித்து வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் நிதியுதவி கொடுப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். வீரர்களை பறிகொடுத்து மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.















