சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் சித்திரவதை: 50 பேரை பிடித்து போலீசார் விசாரணை!
சென்னை அயனாவரத்தில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 15 பேர் பாலியல் சித்திரவதை செய்ததாக அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கேட்கும் திறன் இல்லாத தனது மகளை குடியிருப்பின் காவலாளி ரவி உட்பட, ஊழியர்கள், குடியிருப்பு வாசிகள், உள்ளிட்ட 15 பேர் பாலியல் சித்திரவதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கேட்கும் திறன் இல்லாத தனது மகளால் சரியாக பேச முடியாததால் தனக்கு நேர்ந்ததை விளக்கத் தெரியவில்லை என்றும் அந்த சிறுமி உடல்நலக் குறைபாடு கொண்டு இருந்ததை பார்த்து, தான் சோதித்துப் பார்த்தபோது சிறுமிக்கு நேர்ந்த அவலம் தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த புகாரின் பேரில் 50 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் காவலாளி ரவி உட்பட 3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரியவருகிறது.