சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் !

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூக்கால பணிக்கொடை ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும், மாணவர் ஒருவருக்கான உணவு செலவின தொகையை ஒன்றரை ரூபாயிலிருந்து, ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கடந்த 29-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். அவர்களுடன் அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டம் நீடித்தது.
இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் 10 பேரை, அழைத்துப் பேசிய சமூக நலத்துறை செயலாளர் மணிவாசன், உணவு மானியத் தொகை, போக்குவரத்து படியை உயர்த்திய வழங்குவதாக உறுதியளித்தார். இதை ஏற்று, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.