கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு:
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவர் வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அதை ஒட்டி சிறப்புப் புலனாய்வுப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சிலர் கைது செய்யப்பட்டு சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யபட்ட ஆறு பேரான அமொல் கலே, அமித் தேக்வேகர், மனோகர் எடாவே, சுஜீத் குமார், நவீன்குமார், மற்றும் பரசுரா ஆகியோரிடம் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளதாக சிறப்பு புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த கொலையில் 4 பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நால்வரும் இந்து அமைப்புக்களுக்கு ஆதரவாளர்கள் எனவும் சமுதாயத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இவர்களில் ஒருவர் ராணுவத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் தகவல் அளிக்க சிறப்பு புலனாய்வுப் படை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.