fbpx
REஇந்தியா

கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி-நடிகர் விஷால் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கேரள மாநிலத்திற்கு, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குகிறார்.

 

கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய்மழை:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது.

அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.

கடந்த 5 நாட்களில் மட்டும் 47 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலமே மழையின் காரணமாக சோகத்தில் மூழ்கியுள்ளது.

மழைத்தொடர்பான சம்பவங்களால் கேரளாவில் தற்போது வரை 67 பேர் பலியாகியுள்ளனர். 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் ரயில் போக்குவரத்து, பேருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதி:

இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் கமல், சூர்யா, கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் கேரளாவிற்கு நிதி உதவி அளித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் திரைத்துறையை சார்ந்தவர்களும், தனது ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை கேரள மாநிலத்திற்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close