கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பு -மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநில முதல்வர்கள் நிவாரண நிதி அறிவிப்பு !
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும், சேதாரங்களும் கணக்கில் அடங்காத நிலையில் உள்ளது.
கேரள மக்கள் உண்ண உணவின்றி தவித்து கொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமமான நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வேண்டி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் நிலைகுலைந்து போன கேரளாவுக்கு உத்திர பிரதேச அரசு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தை தொடர்ந்து, கேரளாவுக்கு மத்திய பிரதேச மாநிலம் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசின் முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தனது ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.
இவர்களை தொடர்ந்து, வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணத்திற்காக தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.