குரல் பரிசோதனைக்கும் நான் தயார்: இது சசிகலா குடும்பத்தினரால் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி….ஜெயக்குமார் ஆவேசம்
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக வலைதளங்களில் நேற்று ஆடியோ ஒன்று பரபரப்பாக சுற்றி வந்தது. இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார்.
மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது;
சசிகலாவின் குடும்பத்தினர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்கள், அவர் தான் மாபியா கும்பலே… அவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எதிர்க்கிறேன் என்றால் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வினரின் உணர்வு, எண்ணம் மற்றும் குரல்களை பிரதிபலிக்கின்றேன். அதனால் என் மீது அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
பிறப்பு சான்றிதழில் பெயர் போடப்பட்டிருப்பது பற்றி அவர் கூறுகையில், உங்கள் (செய்தியாளர்) பெயர் கூட அதில் போடலாம். என்னுடைய கையெழுத்தா அதில் இருக்கிறது? டி.ஜெயக்குமார் என்று நான் ஒருத்தானா இருக்கிறேன்? இது ஒரு திட்டமிட்ட சதி. இதுபோன்ற சதிகளை நான் 1982-ம் ஆண்டில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது ஒரு விஷயம் கிடையாது.
ஆடியோ குரல் பரிசோதனைக்கு நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன்.
மேலும் இதனை எதிர்த்து நான் நிச்சயமாக வழக்கு தொடருவேன். போலீசில் புகாரும் கொடுப்பேன். மறைந்திருந்து கிரிமினல் வேலைகளை செய்வதில் டி.டி.வி.தினகரனுக்கு நிகர் டி.டி.வி.தினகரன் தான். எங்கு மறைத்து வைத்தாலும் சரி, சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? கண்டிப்பாக நிற்காது. அ.தி.மு.க. அரசை காப்பாற்றுவதற்கு கண்டிப்பாக அந்த 18 பேரும் திரும்புவார்கள். மறைத்து வைக்கலாம் ஆனால் அது நடக்காத காரியம். சசிகலாவை ஜெயலில் பார்ப்பதற்கு ‘டோக்கன் செல்வன்’ சென்றிருக்கிறார். முன்னோட்டமாக அங்கு நானும் வருகிறேன் என்று சொல்வதற்கு தான் சென்றிருக்கிறார்.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.