fbpx
REதமிழ்நாடு

காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி மீண்டும் சர்ச்சை!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி,

மேகதாது அணை கட்டுவதில் தமிழகத்தை சமாதானம் செய்யும் வகையில் விரைவில் தமிழகத்துக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு விவசாயியாக அவர்களது சிரமத்தை அறிந்ததால், கபினி அணை நிறைவதற்கு முன்பே தமிழகத்துக்கு தண்ணீரை விடுவித்ததாகக் கூறிய குமாரசாமி, மேகதாது அணை விஷயத்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கலாம் என்றும் புதிய அணையால் தமிழகம், கர்நாடகா இரண்டு மாநிலங்களுமே பயன்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓரிரு நாட்களில் மேட்டூர் மற்றும் பவானி அணைகள் நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கப் போவதாக சுட்டிக் காட்டிய குமாரசாமி,

கூடுதலாக ஒரு அணை இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது புதிய திட்டமில்லை,

ஏற்கனவே உள்ளதுதான் என்று கூறிய முதல்வர் குமாரசாமி, காவிரி நடுவர் மன்றத்தால் கண்டுகொள்ளப்படாத பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய அணை உதவும் என்றும் கூறியுள்ளார்.

காவிரியில் மேகதாது அணையை 5 ஆயிரம் ஏக்கரில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான பூர்வாங்க ஒப்புதலை முந்தைய கர்நாடக காங்கிரஸ் அமைச்சரவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேகதாதுவில்  அணை கட்ட தமிழக அரசு கடுமையாக எதிர்த்துவரும் நிலையில் கர்நாடக முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது மீண்டும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close