எம்.எல்.ஏ கருணாஸ் புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருவாடானை தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திரைப்பட நடிகருமான கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக காவல் துறையை பற்றியும் அவதூறாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வீடியோக்கள் யுடியூப் மற்றும் பிரபல வலைத்தளங்களில் பரவியது.
மேலும் முதல்வர் பழனிச்சாமி தன்னை பார்த்து பயப்படுவதாகவும் , இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாகவும் கருணாஸ் கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் காவல்துறை அதிகாரியிடம் யுனிபார்மை
கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவால் விடுத்தார். அதனால் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கொலை மிரட்டல், கொலை முயற்சி என்று 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாசை அக்டோ-5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ கருணாஸ் புழல் மத்திய சிறையுள் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது எம்.எல்.ஏ கருணாசை பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.