இந்தியாவின் பி.வி.சிந்து, ஆசிய விளையாட்டு போட்டியின் 2-வது நாளில் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இன்று வெற்றி!
ஆசிய விளையாட்டு போட்டியில் 2-வது நாளாக, மகளிர் அணிக்கான பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பாக பி.வி.சிந்துவும், ஜப்பான் அணியின் சார்பாக அகானே யமகச்சியும் மகளிர் அணிக்கான பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் விளையாடினர். இந்த போட்டியின் முதல் செட்டில் ஜப்பானின் அகானே யமகச்சி முன்னிலை பெற்றார். அவரை 5-5 என்ற செட் கணக்கில் சமன் செய்தார் சிந்து. பின்னர் தொடர்ந்து போட்டியை தன்வசப்படுத்தினார். முதல் செட்டில் 21-18 என்ற புள்ளி கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
அதன் பின்னர் 10-11 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டில் முன்னிலை பெற்றார் அகானே. இதனைத் தொடர்ந்து, 19-19 என்ற புள்ளி கணக்கில் போட்டியை சமநிலைக்கு கொண்டு சென்ற அகானேவிடம் இருந்து 2வது செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
இதனால் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-18, 21-19 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் அகானே யமகச்சியை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.