ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்.எல்.ஏ …
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தனது நடிப்பில் வெற்றிக்கொடியை நாட்டியவர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த நடிகையாக புகழ் பெற்றவர். இந்நிலையில் தனது சொந்த ஊரான அந்திர பிரதேசத்தில் அரசியல் பிரவேசத்திலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர்.
1999-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இரு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினருடன் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி, 2009-ஆம் ஆண்டு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அதுமுதல் தெலுங்கு தேசம் கட்சியை ரோஜா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, அதை திருப்பிச் செலுத்தாத பெண்களை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 1800-க்கும் அதிகமானோர் புகார் அளித்தனர். அந்த வழக்கில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. போடி பிரசாத்துக்கு தொடர்பு இருப்பதாக, சட்டப்பேரவையில் ரோஜா புகார் கூறினார்.
இதனால் ரோஜாவை பாலியல் தொழிலாளி எனவும் அவர் பாலியல் தொழில் நடத்தி வந்ததாகவும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. போடி பிரசாத் விமர்சித்தார்.
இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. போடி பிரசாத் மீது ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரோஜா. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போடி பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்ய நேற்று உத்தரவிட்டது.