தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக அரசின் பயங்கரவாதத்திற்கு ஓர் உதாரணம் ;ராகுல் காந்தி கடும் தாக்கு!!!
புதுதில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசின் பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது இன்று நூறாவது நாளை எட்டியது. இன்று காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டகாரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமானது அரச பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அரசு முன்னின்று செய்யும் பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். நீதிக்காக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை அனைத்தும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.