fbpx
Others

கடலரிப்பை தடுக்க கடலோரத்தில் பனை மரங்களை வளர்க்க வேண்டும்..

Panaimaram Nanmaigal (Palm Tree Benefits)In Tamil

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டின் கடற்கரை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம்ஏழு தேசம் வரை 1076 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கடற்கரையில், காலநிலை மாற்றங்கள் காரணமாக தற்போது அடிக்கடி கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது.ஓரிடத்தில் அலைகளால் அரிக்கப்படும் மணல், இன்னோரிடத்தில் படியும். பின்னர் காற்றின் திசையும் கடலின் நீரோட்டமும் மாறும் போது, மணல் படிந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலிருக்கும் மணல் – முன்னர் கடலரிப்பு ஏற்பட்ட இடத்தில் படியும். இதன்போது, கடலரிப்பினால் ஏற்பட்ட பாதிப்பு சீராகி விடும். இது இயற்கையாக மாறி மாறி நடைபெறும். இதனால் கடலரிப்பை அரசுகளும், மீனவர்களும் கவனத்தில் கொள்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.தற்போது திருச்செந்தூர் முருகன் ஆலயம் முன்பு ஏற்பட்டுள்ள கடலரிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடலரிப்பை தடுக்க நமது முன்னோர்கள் பனை மரங்களை நட்டு வளர்த்து கடலரிப்பை தடுத்து இருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் பொய்கை நல்லூர் கிராமத்தில் ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகளை கடலோரத்தில் விதைத்து பனை மரங்களை வளர்த்து உள்ளனர். ஒவ்வொரு மரமும் நூறு ஆண்டுகளை கடந்தும் கடலோரத்தில் கம்பீரமாக உயர்ந்து நின்று கடலரிப்பு ஏற்படாமல் பாதுகாத்து நிற்கிறது. இன்றும் பொய்கைநல்லூர் கிராம மக்களாலும், வனத்துறையினராலும் பனை மரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பனை மரங்களின் வளர்ச்சியால் கடல் மணல் சேகரிக்கப்பட்டு ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு மணல் சுவராக உயர்ந்து நின்று சுனாமியின் போது பொய்கைநல்லூரில் உயிரிழப்பும், விளைநிலங்களும் பாதுகாக்கப்பட்டது. கஜா புயலின் போதும் பொய்கை நல்லூர் சுற்று வட்டாரங்களில் பாதிப்பின் அளவு குறைந்தே காணப்பட்டது. 1076 கிலோ மீட்டர் தொலைவு கொண்டாட தமிழக கடற்கரை முழுவதும் கடந்த ஆண்டு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரியம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சமூகநல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சுமார் 68 இலட்சம் பனை விதைகளை நட்டோம். நட்ட அனைத்து விதைகளும் முளைத்து பனங்கன்றுகளாக வளர்ந்து நிற்கிறது. இதே போன்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு பனை விதைகளை தமிழக கடலோரத்தில் விதைக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பனை விதைகள் உதிரும் காலம், இந்த பனை விதைகள் மரத்திலிருந்து உதிர்ந்த 22 நாட்களுக்குள் கடலோரத்தில் விதைத்து விட்டால் அனைத்து விதைகளும் முளைக்க தொடங்கிவிடும். இதற்கான அறிவிப்பையும், உரிய நிதியையும்மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத பட்சத்தில் கார்பரேட் நிறுவனங்களின் சமூக நல மேம்பாட்டு நிதி மூலமாகவும் பனை விதைகளை நட்டு கடலரிப்பை நிரந்தரமாக தடுக்கலாம். இவ்வாறு தனது செய்தி குறிப்பில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close