கேரளாவில் 2 மாதங்கள் கழித்து நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு…!
Liquor sales start tomorrow in kerala

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா காரணமாக கேரளாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து ஆன் லைனில் மது விற்க அரசு தீர்மானித்தது. ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாளை முதல் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும்.

ஆனால் மது வாங்க காலை 6 மணியிலிருந்து 10 மணிக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் டோக்கன் இல்லாதவர்களுக்கு மது கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அம்மாநில அரசு BEVCO என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்து டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கனில் எந்த நேரத்தில் மது வாங்குவது என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். எனவே அந்த நேரத்தில் மட்டும் மதுக்கடைகளுக்குச் சென்று மது வாங்க வேண்டும்.















