ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக குமாரசாமி குற்றச்சாட்டு
பல குழப்பத்துக்கிடையே கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா இன்று அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா பதவியேற்பதற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில் இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனிடையே 104 இடங்களை கொண்ட பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பை காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி தெரிவித்து வருகிறது. இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகிறார். பெரும்பான்மையில்லாத நிலையில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துகிறது என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அரசியல் சாசனத்தை ஆளுநர் மீறுவதாக குற்றம் சாட்டிய அவர், ஜனநாயகத்தையே பாஜக கேலி சித்திரமாக்கி கொண்டிருக்கிறது என்று வேதனை தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் தேவகவுடா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் இணைந்து போராட உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பாஜக எதிராக மாநில கட்சிகளை ஒன்றிணைக்க உள்ளதாக குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து எம்.எல்.ஏக்களை மிரட்டுவது பாஜகவின் வாடிக்கை என்றும் எங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார். காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது என்று தெரிவித்த குமாரசாமி, பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் என்றும் சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என்றும் குமாரசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.