பைக்கில் இருவர் சென்றால் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்;உயர்நீதிமன்றம் வழக்கம் போல் உத்தரவு.

இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும்போது இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கம்போல் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் இறப்பதற்கு முக்கிய காரணம், ஹெல்மெட் அணியாததுதான்.
ஹெல்மெட் அணிவது, கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது தொடர்பான பல விழிப்புணர்வுகளை செயல்படுத்தினாலும், வாகன ஓட்டிகளின் அலட்சியம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், கட்டாயமாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறைகளை காவல்துறையினர் முதலில் முறையாக பின்பற்ற வேண்டும் என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கண்டிப்புடன் கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த நீதிபதி, கேரளாவில் வேகமாக சென்ற முன்னாள் ஆளுநர் மற்றும் நீதிபதியின் வாகனங்கள் ரேடார் மூலம் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விதிமுறைகளை தமிழ்நாட்டிலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் சட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.