சிங்கப்பூரில் விமானம் பறக்க கட்டுப்பாடுகள் விதிப்பு!!
சிங்கப்பூர்: விமானங்கள் பறக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, வடகொரியா இடையே நிலவிய உரசல்கள் முடிந்து, தற்போது பேச்சுவார்த்தையை நெருங்கியுள்ளது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுகிறது. தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நனவாக உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
இச்சந்திப்பு நடக்கும் இடத்தை சிங்கப்பூர் பெற்றுள்ளது. ஜூன் 12 ல் சிங்கப்பூரின் செந்தோசா தீவில், இருநாட்டு தலைவர்கள் சந்திக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. சிங்கப்பூரின் சில பகுதிகளை சிறப்பு நிகழ்ச்சி பகுதியாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜூன் 11, 12, 13 ல் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான்பரப்பில் தங்களது வேகத்தை குறைத்தல் மற்றும் விமான ஒடுதளத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .