இந்தியா அபாரம் 109 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் ஆல் அவுட்!!
ஆஃப்கானிஸ்தான் அணியை முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கே ஆல் அவுட்டாக்கி அனுப்பினர் இந்திய பவுலர்கள்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் போட்டியில் இந்தியாவுடன் ஆடிவருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஷிகர் தவானின் அதிரடி சதம், முரளி விஜயின் நிதான சதம், ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களை குவித்தது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின், உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி ஆல் அவுட்டானது.
உணவு இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது . இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஃப்கானிஸ்தான் அணி, 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா ஷேஷாத்தை ரன் அவுட்டாக்கினார்.
இந்திய அணியை விட சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதாக கூறிய ஆஃப்கானிஸ்தான் கேப்டனுக்கு, சிறப்பான பவுலிங்கின் மூலம் அஷ்வினும் ஜடேஜாவும் பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இருவரும் இணைந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.