20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் !
வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு நிலக்கரி மூலம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.இவற்றுக்கு தேவைப்படும் நிலக்கரியை மத்திய அரசு மூலம் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சார வாரியம் வாங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய நிலக்கரியை மத்திய அரசு அனுப்பாததால் தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கூடுதல் நிலக்கரி வழங்குமாறு வலியுறுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு நாள்தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
கூடுதல் நிலக்கரி தேவைப்படுவதால் வெளிநாடுகளில் 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அதன்படி நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.